"சார்க்" தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக முதற்கட்டமாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ள , ஒருங்கிணைந்து செயல்பட முன்வருமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம், சார்க் நாடுகளின் தலைவர்களுடன் மாலையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, நமது மக்கள் ஒருவருக்கொருவர் இடையிலான உறவுகள் பழமையானது என சுட்டிக்காட்டினார். நமது சமூகங்கள் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்றார். எனவே, கொரானா வைரஸ் குறித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென சார்க் நாடுகளின் தலைவர்களை, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக முதற்கட்டமாக 10 மில்லியன் டாலர் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்த பிரதமர் மோடி, சார்க் நாடுகள் இணைந்து, அவசர கால நிதியை உருவாக்க, முன்வருமாறு, கேட்டுக்கொண்டார்.
நவீன உபகரணங்களுடன் கூடிய மருத்துவக்குழுவை உருவாக்கி வருவதாகவும், இக்குழுவை அண்டை நாடுகளும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,சவால்களை எதிர் கொள்ள இந்தியா முன்வைத்த யோசனைகளும் ஆலோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பாராட்டு தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோஹே, நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு தனி உதவியாளர் ஜாபர் மிஸ்ரா ஆகியோரும் பிரதமர் மோடியுடன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
Comments